செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்-9 போர்த்தேங்காய் அடித்தல்

சேனையூரில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்-9
போர்த்தேங்காய் அடித்தல்
போர்த்தேங்காய் அடிக்கும் போட்டி தமிழ் ஆண்டுப் பிறப்பு நாளிலும் வேறு சிறப்பு நாட்களிலும் நடக்கும். இதற்கெனப் புறம்பாகச் சேர்த்து வைத்திருக்கும் உரித்த, வைரமான, தேங்காய்களை வாங்கி வைத்திருந்து, ஒரு கோயில் வாசலில் அல்லது வெளியான இடத்தில் மக்கள் கூடி, அங்கு தேங்காய் அடி நடைபெறும். இலங்கையில் தமிழர் பகுதிகளில் போர்த்தேங்காய் அடிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. சேனையூரிலும் இது மிகச் சிறப்பாக நடந்த ஒரு காலம் உண்டு.
சேனையூர் பிள்ளையார் கோயிலடி போர்த்தேங்காய் அடித்தல் விளையாட்டுக்கு பேர் போன இடம் சித்திரை வருடப் பிறப்பன்று,அதற்கு அடுத்த நாள் என அந்த வாரம் முழுவதும் தொடரும் சேனையூரை சூழ உள்ள இடங்களிலுள்ளவர்கள் சேனையூர் பிள்ளையார் கோயில் முன்றலில் கூடுவர்.
போட்டியாளர் ஒவ்வொருவரும் நான்கு அல்லது ஐந்து போர்த் தேங்காய்களை வைத்திருப்பார். ஒருவர் ஒன்றை நிலத்தில் உருட்டி விடுவார். மற்றொருவர் அதனுடைய லேசாக உடையக்கூடிய பகுதி எவ்விடத்தில் இருக்கிறதென்று சுற்றிவந்து அவதானித்துத் தனது கைத்தேங்காயை அதன்மேல் ஓங்கி அடிப்பார். நிலத்துத் தேங்காய் உடைந்து விட்டால் அவருக்கு வெற்றி; கைத்தேங்காய் உடைந்தால் அடித்தவருக்குத் தோல்வி. தோற்றவர் இன்னுமொரு தேங்காயைப் பாவிப்பார். இப்படியாகத் தேங்காய்கள் உடைந்துபோக கடைசியில் எல்லாருடைய அடிகளுக்கும் தப்பி உடையாமல் நின்று பிடிக்கும் தேங்காயின் சொந்தக்காரர் தான் வெற்றியாளர்.
போர்த் தேங்காயடித்தல் இரண்டு வகை பட்டது.
1)நிலத்தில் வைத்து அடித்தல்
2)எறி தேங்காய் அடித்தல்
எறி தேங்காயடித்தலில் தேங்காய்கள் அந்தரத்தில் ஒன்றோடு ஒன்று மோதி சிதறும்.
போட்டி மிக கடுமையாக இருக்கும்.என் தகப்பனார் போர்த்தேங்காய் அடிப்பதில் மன்னன் என்றே சொல்லலாம்.எங்கள் பணிவு வளவில் போர்த் தேங்காய் மரமே இருந்தது.இதை விட திருகோணமலை சென்று காலித் தேங்காய் வாங்கி வருவார் அப்புச்சி.
கையான் தேங்காய்
எதிரணியினர் கொண்டு வருகின்ற தேங்காய்களை துவம்சம் செய்யும் ஆயுதம் என்று சொல்லலாம்.அப்புச்சி பல கையான் தேங்காய்கள் வைத்திருப்பார்.எதிராளிகளின் தேங்காய்கள் அப்புச்சியின் கையான் தேங்காய்க்கு முன் சுருண்டு சுக்கு நூறாகும்.அப்புச்சியின் பக்கத்தில் அவரது நண்பர்கள் துணைக்கு நிற்க ஒரு யுத்த களம் போல் காட்சியளிக்கும்.மருதநகர் சண்டியன் சின்னையர்,கட்டைபறிச்சான் பழைய விதானையார் திரு.சிவபாக்கியம் முதலானோர் போர்த்தேங்காய் அடிப்பதில் வல்லவர்கள்.
அப்புச்சி துவம்சம் செய்த தேங்காய்கள் மலையென குவியும் அவை அடுத்த நாள் எங்கள் வீட்டில் அம்மாவின் கை வண்ணத்தில் தேங்காயெண்ணையாய் மாறும்

No comments:

Post a Comment