செய்திகள்,வரலாறு,பண்பாடு

Saturday 15 August 2015

சேனையூர் வரலாறு-18

சேனையூர் வரலாறு-18




பழந்தமிழர் மரபில் சேனையூர்

''ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை''
எனபது பழமொழி அது எங்கள் ஊருக்கு மிகப் பொருத்தம்.சேனையூரும் சேனையூரை சூழ உள்ள காடுகளும் இலுப்பை மரங்களால் நிறந்திருந்த ஒரு காலம்,அனேகமாக ஒவ்வொரு வீடுகளிலும் இலுப்பை பாணி பானைகளில் நிறைந்திருக்கும்.
சித்திரை வைகாசி மாதங்களில் இலுப்பை பூக்கள் சொரியும் .ஊரவர்கள் அதிகாலை வேளையில்வண்டில் கட்டிக் கொண்டு காடுகளுக்கு செல்வர் விடிகாலையில்தான் பூக்கள் சொரியும்.சிலர் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு இரவு நேரத்தில் சென்று தங்கியிருந்து பூக்களை சேகரிப்பர்.பூக்கள் மழை துளி போல சொரிய தொடங்கும் அந்த இனிய மணம் காடு முழுவதும் பரவும்.பலர் அந்த வாசனையயை வைத்துக்க் கொண்டு இலுப்பை மரத்தை கண்டு பிடிப்பர்.பூக்கள் பொறுக்க குடும்பம் குடும்பமாக கூடியிருப்பர்.மிக நீண்டு உயர்ந்த மரங்களாய் பரந்து விரிந்திருக்கும் இலுப்பை மரங்கள்.சில இடங்களில் திருவிழா கூட்டம் போல இருக்கும்.
பூக்கள் பாணியாக மாறுவதே ஒரு தனியழகுதான் எங்கள் கல்லம்பார் ஆத்த இதில் ஒரு நிபுணி என கூறலாம்.முதலில் சேகரிக்கப் பட்ட பூக்களை பானையில் இட்டு அவிப்பர்,அவித்த பூக்களை பிழிந்து சாறாக்கி தாச்சி சட்டியிலிட்டு காய்ச்ச அது பாணியாகும் .
பழம் சோறு தயிர் வாழைப்பழம் இலுப்பப்பாணியோடு சேர்த்து சாப்பிட அதன் சுவையோ தனிதான்.அந்த மணமும் சுவையும் எப்போது நினைத்தாலும் இனிக்கும்.இலுப்பை பாணி பழுதுபடாமல் வருசக் கணக்கில் இருக்கும்.
"குன்றா இலுப்பையின் பூ கூர் மதுரம்
வாசனையாத் தின்றாற் பயித்தியமும் சேருங்காண்"
என அகத்தியர் குண பாடம் கூறும்.
சேனயூர் மக்கள் இன்று வரை இந்த மரபை பின் பற்றுகின்றனர்.பழந்தமிழர் வாழ்வில் இலுப்பை பாணியின் பயன் பாட்டை இலக்கியங்களில் அறிய முடியும்.சேனையூர் தமிழ் மக்கள் இலுப்பை பாணியோடு கொண்டுள்ள தொடர்பு தமிழர் தொன்மை சார் மரபை உணர்த்தி நிற்கிறது

No comments:

Post a Comment