செய்திகள்,வரலாறு,பண்பாடு

Sunday 23 August 2015

சேனையூரின் சமூக நடைமுறைகள் -4 கிணறு

சேனையூரின் சமூக நடைமுறைகள் -4
கிணறு
சேனையூரில் எங்கு தோண்டினாலும் நல்ல சுவையான தண்ணீர் ஒரு பத்தடி ஆழத்திலேயே கிடைக்கும்.ஆகக் கூடிய ஆழம் ஒரு பதினைந்து அடிதான்.ஆக இங்கு கிணறு இடிப்பது மிக இலகுவான ஒன்று.உறவினர்களது உதவியுடன் கிணறு தோண்டப் படும் கிணற்றில் தண்ணி கண்ட பின் பொங்கல் வைத்து மகிழ்ச்சி கொள்வர்.
சேனையூரில் கிணறும் கிணற்றோடு இணைந்த துலாவும் ஒரு பண்பாட்டு அடையாளம்.
எமது மண்ணின் பண்பாட்டுச்சின்னங்களில் ஒன்று துலா . இந்தத் துலா என்பது ஒரு நீளமானதும், நேரானதுமான , ஒரு மரத் தண்டு ஆகும். இந்த மரத்துக்குக் குறுக்கே, அதனூடு இன்னொரு தண்டு செலுத்தப்பட்டு இருக்கும். இத்தண்டின் இரு முனைகளும் கட்டற்ற வகையில் சுழலக்கூடியவாறு தாங்கப்பட்டும். இத்தண்டு அச்சாகச் செயற்பட, முதலில் குறிப்பிட்ட நீளமான மரம் அந்த அச்சைப் பற்றி மேலும் கீழுமாக அசையக் கூடியதாக இருக்கும். அச்சாகச் செயற்படும் தண்டு அச்சுலக்கை எனவும் அச்சின் இரு முனைகளையும் தாங்குவதற்காகக் உருவாக்கப்படும் அமைப்பு ஆடுகால் எனவும் அழைக்கப்படும். ஆடுகால்கள் பெரும் பாலும் நன்கு வைரமான முதிரை மரங்கள் பாவிக்கப் படும்.
அச்சுலக்கை துலாவின் நடுப்பகுதியிலன்றி, நடுவிலிருந்து சற்றுத் தள்ளியே பொருத்தப்படும். இதனால் அச்சுலக்கையில் இருந்து துலாவின் ஒரு பகுதி மற்றப்பகுதியிலும் விடக் கூடிய நீளம் உள்ளதாக இருக்கும். நீளமான பகுதி கிணற்றை நோக்கி இருக்கும்படியும், அந்தப் பக்கத்து முனை கிணற்றுக்கு நேராக வரக்கூடியதாகவும் துலா ஆடுகாலில் மீது தாங்கப்படும். கிணற்றுக்கு நேராக இருக்கும் துலாவின் முனையில் நீளமான துலாக்கொடி கட்டப்படும் துலாக் கொடியாக நீண்ட ஆலம் விழுதுகள் பன்படுத்தப் படும் ஒன்றின் ஒரு முனையைக் கட்டி மறு முனையில் ஒரு பாத்திரம் கட்டப்பட்டும். துலாவின் இந்தமுனையைத் தாழக் கொண்டுவரும்போது பாத்திரம் கிணற்று நீருள் அமிழக்கூடியதாகக் கொடியின் நீளம் இருக்கவேண்டும். பயன்படுத்தாதபோது துலாக் கொடிபொருத்திய முனை மேல் நோக்கி இருப்பதற்கு ஏதுவாகத் துலாவின் மறு முனையில் பாரமான கல் அல்லது இரும்புத் துண்டுகள் மூலம் சுமை ஏற்றப்பட்டிருக்கும்.
நீர் எடுப்பதற்கு துலாக் கொடியை இழுத்து அதன் முனையில் இருக்கும் பாத்திரத்தை நீருக்குள் அமிழ்த்தி அதனுள் நீரை நிரப்புகின்றோம். துலாவின் மறுமுனையில் சுமை இருப்பதால் குறைந்த விசையைப் பயன்படுத்திக் கயிற்றை மேலே இழுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தை மேலே கொண்டுவரலாம்.
சேனையூரில் கிணறு இல்லாத வீடுகள் இல்லையென்றே சொல்லலாம்

No comments:

Post a Comment