செய்திகள்,வரலாறு,பண்பாடு

Saturday 15 August 2015

சேனையூரும் இயற்கை வளமும்-1








சேனையூரும் இயற்கை வளமும்-1

இயற்கை தன் அருட்கொடைகளினால் அள்ளித் தெளித்திருக்கும் வண்ணக் கோலம் எங்கள் சேனையூர்.முல்லை,மருதம் நெய்தலோடு குறிஞ்சியின் சுவடுகளும் கொண்டது.சேனையூர்.மாவலியாறும் கடலும் ஒரு சேர சங்கமித்து சிற்றாறாய் பெருகி எம்மூரை வட்டமிட்டு களியோடைகளாய் விரியும் எங்கள் நிலம்.
கரையோரம் எங்கும் கண்ணா மரங்களின் கூடல்,ஊசிக் கண்ணா,கீரிக் கண்ணா,வெள் கண்ணா,தில்லங் கண்ணா என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகயான பச்சை வண்ணம் காட்டி நிற்கும்.
கண்ணா மரங்களும் களியோடைகளும் எங்கள் மண்ணின் அழகின் உச்சங்கள்.
துறை தொறும் வள்ளங்களின் வனப்பு,நன்னி துறையால் நடந்து செல்லுதலும்,சிறுக் களி துறையில் நீந்தி செல்லுதலும் சேனையூர் இளைஞர்களின் விளையாட்டு.
சேனையூர் சிற்றாறு களி ஓடைகள் வழியே பயணித்து கமுகும் தென்னையும் கவினுறு சோலையாய் குடை விரிக்க ஊத்த்டிக் கரைச்சையில் ஊற்றெடுத்து ஓடையாய் உருப் பெற்று சம்புக் குளத்தோடு இணயும் அழகு இணயிலா எழில் கூட்டும்.
மட்டியும் குவாட்டியும்,மணலயும்,பாலயும்மயங்கிடும் சாரல்கள்.நண்டு இறால் நல்ல செத்தல்,செல்வன்,மண்ணா,கிழக்கன்,கீழி,கொடுவா,பாரை,திரளி,சிலுந்தான்,ஓரா,ஒட்டி,உளுவை,காரல்,நெத்தலி,அதள்,என அத்தனை மீனும் அருஞ் சுவையாய் எங்கள் சேனையூர் ஆறு சேமித்து தரும்.
கல் இறால்,வெள் இறால்,மட்டுறால்,கால் இறால்,மணல் இறால் ,கூனி என எல்லா வகையும் எங்கள் ஆற்றில்.
ஆற்றோரம் எங்கும் அழகிய குடியிருப்புகள் குடியிருப்புகள் தோறும் சிறிய சிறிய துறைகள் துறகளை அண்டி சேம்பும் வெருகும் விளைந்து நிற்கும் .முட்டி நண்டுகள் முட்டி மோத கண்ணா மட்டி கால்களில் இடறும்.

பறவைகள் தங்கள் சரணாலயமாய்
கூடு கட்டி குஞ்சுடன் வாழும்.மந்தியொடு சிறுவன் குரங்குகள் மகிழ்ந்து விளையாடும் பின்னர் சீறிக்கொண்டு சினந்து கீச்சிடும்.
வில்லாய் வளைந்த கண்ணா விழுதுகள் கால்களாய் நீண்டு காடாய் பெருகும்.முள்ளி பற்றையாய் முண்டு கொடுக்க மெதுக்கால் நண்டுகள் மெள்ள வந்து உறங்கும் அங்கு.
சேனையூர் எங்கும் பணிவு வளவுகள் வளவுகள் ஒவ்வொன்றும் வளத்தின் சாட்சி.தென்னையும் ,மாவும் தேனுறு பலாவும் ,புன்னையும் ,வாழையும் ,வானுறு கமுகும் என்னமாய் இருக்கும் எவ்வளவு அழகு.
வாயில்கள் தோறும் பவள மல்லியும்,நந்தியா வட்டையும்,செவ்வரத்தையும்,வாடாமல்லியும்,அடுக்கு மல்லியும்,நித்திய கல்யாணியும் நித்திலமாய் பாய் விரிக்கும்

No comments:

Post a Comment